Sunday, February 6, 2011

சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைவதில் இழுபறி நீடிப்பு: தே.மு.தி.க., - பா.ம.க., கட்சிகள் பிடிவாதம்

தமிழகத்தில் கூட்டணி அமைவதில் இழுபறி நீடிப்பதால், எந்தக் கட்சி, எந்த அணியில் இடம் பெறப் போகிறது என்ற, "சஸ்பென்ஸ்' தொடர்ந்து நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் குழு அமைப்பதில் தாமதம் ஏற்படுவதால், தி.மு.க.,வும் அடுத்த கட்டப் பணிகளை தொடர முடியாமல் தவித்து வருகிறது.


முதல்வர் கருணாநிதியின் சமீபத்திய டில்லி பயணம் வரை, தி.மு.க., அணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெற உள்ளன என்பதில் தெளிவான நிலை இருந்தது. ஆனால், அவர் டில்லியில் பா.ம.க., அங்கம் வகிப்பது குறித்து கருத்து தெரிவித்து, அதை ராமதாஸ் மறுத்ததாலும், டில்லியில் முதல்வரிடம் காங்கிரஸ் மேலிடம் காட்டிய அணுகுமுறையாலும், தமிழகத்தில் அரசியல் அணிகளிடையே பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. கடந்த 3ம் தேதி நடந்த பொதுக்குழுவில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டதாக தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. தி.மு.க., சார்பில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்கு ஸ்டாலின் தலைமையில், ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விட்டது. ஆனால், காங்கிரஸ் தரப்பில் இன்னும் குழு அமைக்கப்படவில்லை. காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் வாசன், சிதம்பரம், வன்னியர் ஒருவர், ஆதிதிராவிடர் ஒருவர் குழுவில் இடம் பெறலாம் என, அக்கட்சி தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், கூட்டணி குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து இன்னும் தெளிவான அறிவிப்புகள் வெளிவராததால், தி.மு.க., அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் தவித்து வருகிறது. பா.ம.க., தரப்பு, எந்தப் பக்கம் சீட் எண்ணிக்கை இருக்கிறதோ, அந்தப் பக்கம் சாயலாம் என்ற நிலையை எடுத்து, ஊசலாடிக் கொண்டிருப்பதால், அந்தக் கட்சி எந்த அணியில் இடம் பெறப் போகிறது என்று தெரியாமல் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

அ.தி.மு.க.,வுடன் அணி சேர்ந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.க.,வும், இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அ.தி.மு.க., தரப்பில் இருந்து பல தூதுவர்கள் பேசிய பின்னரும், அந்தக் கட்சி கூட்டணி குறித்து உறுதி அளிக்கவில்லை. தே.மு.தி.க., கூட்டணி சேரப் போகிறதா அல்லது கடந்த தேர்தல்களைப் போல் தனித்துப் போட்டியிட்டு, திராவிட கட்சிகளின் வெற்றிக்கு வேட்டு வைக்கப் போகிறதா என்ற, "சஸ்பென்ஸ்' தொடர்ந்து நீடிக்கிறது. காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமையப் போகிறதா என்ற கேள்விக்கும் இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. இந்த முடிவில், தே.மு.தி.க.,வுக்கும் தொடர்பு இருப்பதால், தமிழக அரசியலில், "சஸ்பென்ஸ்' நீடித்து வருகிறது.