அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கி விட்டதால், தேர்தல் களத்தில் திசை தெரியாமல் சுற்றித் திரிந்த தே.மு.தி.க., தொண்டர்கள், தற்போது சுறுசுறுப்பு அடைந்துள்ளனர்.
தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், தி.மு.க., தரப்பில், பா.ம.க.,விற்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டும், காங்கிரசுடனான தொகுதி பங்கீட்டிற்கு, ஐவர் குழுக்களுக்கிடையேயான பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.அ.தி.மு.க., தரப்பில், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், பார்வார்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுடன், தொகுதி பங்கீட்டு தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கிறது.இப்படி தி.மு.க., - அ.தி.மு.க., தரப்பில் கூட்டணிகள் உறுதி செய்யப்பட்டு, தொகுதி பங்கீடும் முடியும் சூழ்நிலையில், தே.மு.தி.க., யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதில், அக்கட்சியின் தலைமை தொடர்ந்து மவுனம் காத்து வந்தது.
தேர்தலையொட்டி, பல இடங்களில் தி.மு.க., கூட்டணியினர் சுவர் விளம்பரம், வாக்காளர் கவனிப்பு என, களத்தை சூடுபடுத்தி வரும் நிலையில், யாருடன் கூட்டணி எனத் தெரியாமலும், தேர்தல் பணியில் இறங்க முடியாமலும் தே.மு.தி.க., தொண்டர்கள் தவித்து வந்தனர்.வரும் தேர்தலில் தே.மு.தி.க., தனித்து போட்டியிடும் நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் இருந்தனர். கடைசிக்கட்ட சூழ்நிலையில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் சூழ்நிலை ஏற்படுமோ எனவும் எண்ணியிருந்தனர்.இப்படி கூட்டணி, "டென்ஷன்' தொடர்ந்ததால், அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தேர்தல் பணியில் ஆர்வம் காட்ட முடியாமல் குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில், கூட்டணி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நேற்று முன்தினம் தே.மு.தி.க., - அ.தி.மு.க., கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையில், மூவர் குழுக்கள் அடங்கிய முதல் கட்ட பேச்சு நடந்தது. இந்த பேச்சு இருதரப்பினரிடையேயும் சுமூகமாக முடிந்துள்ளது. அக்கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்த்தது போலவே கூட்டணி உறுதியாகிவிட்டதால், அவர்கள் தற்போது தேர்தல் களத்தில் சுறு, சுறுப்பாகியுள்ளனர். குறிப்பாக அவர்கள் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து தேர்தல் பணியாற்ற ஆயத்தமாகிவிட்டனர்.