Tuesday, February 15, 2011

சட்டசபை தேர்தலில் கருணாநிதியை தோற்கடிப்போம்: ஜெயலலிதா ஆவேசம்

சென்னை : ""சட்டசபை தேர்தலில் இது வரை தோற்றதில்லை என்றும் கூறும் கருணாநிதியை முதல்முறையாக தோற்கடிப்போம்,'' என்று அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா பேசினார்.

ஜெயலலிதாவின் 63-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜெ.,பேரவை சார்பில், சென்னையில் நடந்த விழாவில், 65 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்து ஜெயலலிதா பேசியதாவது:ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைமாறிய பல லட்சம் கோடி ரூபாய் தமிழகத்தை சேர்ந்த, ஒரே குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டு, குற்றச் செயல்களுக்கும், சீர்கேடுகளுக்கும் காரணமாக உள்ளது.இப்பணத்தை பல கோடி ரூபாயை கல்வி, சுகாதாரம், தொழில், விவசாய வளர்ச்சிக்கு பயன்படுத்தி இருந்தால், நாடு செழிப்படைந்து இருக்கும். இவர்களிடமிருந்து தமிழகத்தையும், தேசத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை அ.தி.மு.க.வுக்கு உண்டு.ஊழல் சக்திகளின் கையில் பணம், அதிகாரம், அடியாள் பலம் உள்ளது. நம்மிடம் நேர்மை, தேச பற்று, பொது நலன் உள்ளது. இவற்றைக் கொண்டு தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஆட்சியை அமைக்க ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும். இது அரசியல் அறைகூவல் அல்ல ஒட்டு மொத்த தமிழர்களின் அறைகூவல். நம்மிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடாது.



தேர்தலில் கருணாநிதி தோற்றதே இல்லை என்று சொல்லுகிறார். நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் அவரை தோற்கடித்து, புதிய வரலாறு படைப்போம். அதன் பின், அ.தி.மு.க.வுக்கு வீழ்ச்சியே கிடையாது.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.


விழாவில், 65 மணமகன்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து, திருமணத்தை ஜெயலலிதா நடத்தி வைத்து, பூஜை மற்றும் சமையல் பாத்திரங்கள், படுக்கையறை பொருள்கள் என பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.


குரு- சீடன் கதை : ஜெயலலிதா கூறிய குட்டி கதை:குருவும், சீடனும் காட்டு வழியில் சென்று கொண்டிருந்தனர். வழியில், துளிர்விடும் செடியை பிடுங்கும்படி சீடனிடம் குரு கூறினார். சீடனும் பிடுங்கி எறிந்தான். சிறிது தூரம் சென்றதும் சிறிது வளர்ந்த செடியை பிடுங்கும்படி, குரு கூறினார். சீடனும் பிடுங்கினான். கடைசியாக பெரிய மரத்தை பிடுங்கும்படி குரு கூறினார். சீடன் திகைத்து நின்றான்.இதைப் பார்த்த குரு, முளைவிட்ட செடியை எளிதாக பிடுங்கி விட்டாய். அதை போல, பிரச்னையை ஆரம்பித்திலேயே தீர்க்க வேண்டும்.கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் அனைத்து துறைகளிலும் புகுந்துவிட்டது. இதை, முளையிலேயே கிள்ளி எறிய சட்டசபை தேர்தல் நல்ல தருணம் என்றார்.