சென்னை: தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 31 சட்டசபை தொகுதிகளும், 2013ல் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளன. முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் நேற்று காலை 9 மணிக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். இரண்டு மணி நேரம் நடந்த சந்திப்பின் போது, இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான தொகுதி பங்கீடு முடிவானது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதியும், ராமதாசும் கையெழுத்திட்டனர். வெளியில் வந்ததும், ராமதாஸ் நிருபர்களிடம் கூறும் போது, ""என் பேரன் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க, முதல்வரை சந்திக்க வந்தேன். தேர்தல் உடன்பாட்டையும் முடித்துக் கொண்டு திரும்பியுள்ளேன். மகிழ்ச்சியுடன் முதல்வரை சந்திக்கச் சென்ற நான், மகிழ்ச்சியுடன் திரும்பியுள்ளேன்,'' என்றார்.
பின், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராமதாஸ் அளித்த பதில் விவரம்:
* அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் தேர்தல் உடன்பாடு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததா?
எதிர்பார்ப்பு இருந்தது; நிறைவேறியும் உள்ளது.
* காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்கும் திட்டம் உள்ளதா?
கடந்த இரு நாட்களுக்கு முன், டில்லியில் சோனியாவை அன்புமணி சந்தித்துப் பேசியுள்ளார்.
* சட்டசபை தேர்தலில் உங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பங்கு வகிக்கும் பா.ம.க., - காங்கிரஸ் - விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகளின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
* கடந்த முறை தொகுதி பங்கீட்டின் போது, அள்ளியும் கொடுக்கவில்லை, கிள்ளியும் கொடுக்கவில்லை என்று கூறினீர்களே... இப்போதைய தொகுதி பங்கீடு எப்படி உள்ளது?
அதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
* கடந்த சட்டசபை தேர்தலில் ஒதுக்கப்பட்ட 31 தொகுதிகளே, தற்போதும் ஒதுக்கப்பட்டு உள்ளதே... இதனால், பா.ம.க.,வின் வாதிட்டு பெறும் சக்தி குறைந்து விட்டதா?
வாதிட்டு பெறும் சக்தி குறையவும் இல்லை; அதிகரிக்கவும் இல்லை. இவ்வாறு ராமதாஸ் கூறினார். பா.ம.க., நிறுவனர் ராமதாசுடன், கட்சித் தலைவர் ஜி.கே.மணி மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.
காங்கிரஸ் அதிர்ச்சி! தமிழக சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, சோனியாவை சந்திக்க டில்லி சென்ற முதல்வர் கருணாநிதி பேட்டியளிக்கும்போது, "பா.ம.க., எங்கள் கூட்டணியில் உள்ளது' என்று தெரிவித்தார். கூடுதல் தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் கேட்டதற்கு, "செக்' வைக்கும் வகையில், பா.ம.க., குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டதாக கூறப்பட்டது. இதை பா.ம.க., தலைவர் ராமதாஸ் மறுக்கவே, பரபரப்பு ஏற்பட்டது. முதல்வருடனான சந்திப்பின்போது, "பா.ம.க.,வுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனக் காரணம் காட்டி, காங்கிரசுக்கான தொகுதிகளை குறைக்கக் கூடாது' என, சோனியா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில், "கூட்டணியில் பா.ம.க., சேர்வதை சோனியா விரும்பவில்லை' என, தி.மு.க., பொதுக்குழுவில் கருணாநிதி தெரிவித்தார். இந்நிலையில், பா.ம.க.,வை அழைத்து பேசி, அவர்களுக்கு 31 தொகுதிகளை ஒதுக்குவதாக நேற்று தி.மு.க., அறிவித்தது. இந்த அறிவிப்பால், காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது. 80 முதல் 100 தொகுதிகளை கேட்டு, காங்கிரஸ் பேரம் நடத்தி வரும் நிலையில், பா.ம.க.,விற்கு வாரி வழங்கியுள்ளதால், காங்கிரசுக்கான தொகுதி ஒதுக்கீடு குறையும் என்பது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. பா.ம.க.,வை காரணம் காட்டி, காங்கிரசுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க, டில்லி பயணத்தின் போது தி.மு.க., போட்ட திட்டத்தை, அக்கட்சி இப்போது செயல்படுத்தி விட்டது என்ற குமுறல் காங்கிரசார் மத்தியில் எழுந்துள்ளது.
2013ல் பா.ம.க.,வுக்கு எப்படி ராஜ்யசபா சீட் கிடைக்கும்? தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 2013ம் ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ள ராஜ்யசபா சீட் எப்படி கிடைக்கும் என்பது இப்போது கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத்தின் சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள கனிமொழி, திருச்சி சிவா (தி.மு.க.,), மைத்ரேயன், இளவரசன் (அ.தி.மு.க.,), ஞானதேசிகன் (காங்.,), டி.ராஜா (மார்க்சிஸ்ட்) ஆகியோரது பதவிக்காலம் 2013ல் முடிகிறது. இந்த ஆறு இடங்களிலிருந்து தான் பா.ம.க.,வுக்கு ஒரு இடம் கிடைக்கும். தி.மு.க., கூட்டணியில் 2013ம் ஆண்டு வரை பா.ம.க., நீடிக்கும்போது, அப்போதுள்ள கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ., எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கும். ராஜ்யசபா எம்.பி.,யாக வெற்றி பெற 34 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. தி.மு.க.,வுக்கு ஒன்றுக்கும் அதிகமான எம்.பி.,க்களை தேர்வு செய்யும் வலிமை இருந்தால் தான் பா.ம.க.,வுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை விட்டுக் கொடுக்கும். காரணம் பா.ம.க., 31 சட்டசபை தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது. தமிழகத்தில் 2008ம் ஆண்டு ஆறு உறுப்பினர்களை தேர்வு செய்ய ராஜ்யசபா தேர்தல் நடந்தது. தி.மு.க., சார்பில் மூன்று உறுப்பினர்களையும், காங்., சார்பில் இரண்டு உறுப்பினர்களையும், அ.தி.மு.க., சார்பில் ஒரு உறுப்பினரையும் தேர்வு செய்தனர். இதில், அன்புமணிக்காக ஒரு உறுப்பினரை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று தி.மு.க.,வை பா.ம.க., வலியுறுத்தியது. ஆனால், கூட்டணி கட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு அந்த இடத்தை வழங்க வேண்டும் என்று தி.மு.க., கூறியதால், கூட்டணியை விட்டு விலகிய பா.ம.க., லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்தது.