Saturday, February 5, 2011

தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் மேலிடம் நெருக்கடி: அதிக தொகுதிகளைப் பெற வியூகம்

தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் இரு கட்சிகளுக்கும் தொகுதிகள் எத்தனை என்பது குறித்து நடைபெறும் திரைமறைவு பேச்சுவார்த்தைக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் துவங்கி விட்டன. அதிக சீட்டுகளை பெற்றுவிட காங்கிரஸ் புது வியூகம் வகுத்துள்ளது. அதை முறியடிக்க நினைக்கிறது தி.மு.க., இரு கட்சிகளுமே பா.ம.க.,வை மையமாக வைத்து தொகுதிப்பங்கீட்டை நடத்தி முடித்துவிட தீவிரம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை கடைசி நிமிடம் வரை இழுத்தடித்து, அதிக தொகுதிகளைப் பெற காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

காங்கிரசுடன் கூட்டணி குறித்து பேசுவதற்காக டில்லிக்கு கடந்த வாரம் தமிழக முதல்வர் கருணாநிதி வந்து, காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம் பேசியபோது, "இரு கட்சிகள் சார்பிலும் குழுக்கள் அமைக்கப்படும்' என்றார். இந்த நிலையில், காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்கு தி.மு.க., தரப்பில் துணைமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் குழு இன்னும் அமைக்கப்படவில்லை. இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை காங்கிரஸ் துவக்கி விட்டதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து டில்லியில் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: முதல்வர் டில்லிக்கு வந்ததே காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதிசெய்வதற்கு தான். ஆனால், அது சோனியாவின் சந்திப்புக்கு பிறகும் நடைபெறவில்லை. காங்கிரஸ் தரப்பில் 80 சீட்டுகள் வரை தர வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை சற்றும் ரசிக்கவில்லை தி.மு.க., இதையடுத்தே குழுக்கள் அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ள இரு தரப்புமே முனைந்து உள்ளன.


கடந்த முறை, பா.ம.க.,வின் 31 இடங்களும், இடதுசாரிகளுக்கு ஒதுக்கிய 23 இடங்களும்தான் இப்போதைய பேச்சுவார்த்தையின் மையம். இடதுசாரிகளின் 23 இடங்களை அப்படியே தங்களுக்கு தரவேண்டும், அதோடு கூடுதலாகவும் சீட்களை ஒதுக்கவேண்டும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. இந்த தகவல்களை டில்லிக்கு வரும் முன்னரே முதல்வர் கருணாநிதி அறிந்திருந்தார். இதை முறியடிக்க பா.ம.க.,வும் கூட்டணியில் இருப்பதாக காட்ட வேண்டுமென திட்டமிட்டு முதல்வர், டில்லியில் முதல் நாள் பேட்டியளித்தார். ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக பா.ம.க., அதை மறுத்துவிட்டது. அதற்கு அடுத்தநாள் காங்கிரஸ் தலைவர் சோனியாவை, முதல்வர் சந்தித்தார். அப்போதுதான் பா.ம.க.,வை கூட்டணியில் சேர்ப்பதற்கு எதிர்ப்பும் தெரிவிக்க பட்டது. கூட்டணிக்குள் பா.ம.க., வந்தால் தங்களது எண்ணிக்கை குறையும் என்று காங்கிரஸ் நினைப்பதே இதற்கு காரணம். கடந்த தேர்தலில் கூட்டணியை விட்டு பிரிந்து சென்ற பா.ம.க.,வை திரும்பவும் ஏன் சேர்க்க வேண்டுமென்று சோனியா கேட்டுள்ளதன் பின்னணியும் இதுதான்.


சோனியாவை சந்தித்துவிட்டு தமிழ்நாடு இல்லம் திரும்பியதும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிதம்பரம், வாசன், தங்கபாலு ஆகியோர், முதல்வரை சந்தித்தனர். அப்போது அவர்களிடம் காங்கிரஸ் தலைமையிடம் பேசிய விஷயங்களை விளக்கியபோது, தமிழக சட்டசபை தேர்தலில் இத்தனை சீட்டுகளை காங்கிரஸ் கேட்பதில் நியாயம் உள்ளதா என்று முதல்வர் கேட்டதாக தெரிகிறது. "தேர்தலில் போட்டி என்பது கடுமையாக இருக்கப்போகிறது. அந்த சூழ்நிலையில், வெறும் தி.மு.க., - காங்கிரஸ் என இரு முக்கிய கட்சிகள் மட்டும் கூட்டணியில் இருந்தால் வெற்றி பெறமுடியாது. வேறுசில கட்சிகளும் இருந்தால்தான் வெற்றிக்கான நம்பிக்கை தொண்டர்கள் மத்தியில் வரும். காங்கிரசைத் தவிர வேறு ஒரு முக்கிய கட்சியும் கூட்டணியில் இடம்பெறுவதே நல்லது. அப்படிப்பார்த்தால் பா.ம.க.,வும், தே.மு.தி.க.,வும் தான் உள்ளன. தே.மு.தி.க., ஏற்கனவே தி.மு.க.,தான் தனது பிரதான எதிரி என்று அறிவித்து விட்டதால், அந்த கட்சியை கூட்டணியில் சேர்ப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. மீதம் இருப்பது பா.ம.க.,தான். எனவேதான் பா.ம.க.,வை கூட்டணியில் சேர்க்கலாம்' என்று தி.மு.க., தொடர்ந்து கூறிவருகிறது. காங்கிரசுக்கு கூடுதல் சீட்டுகள் அளித்து கூட்டணி அமைச்சரவை போன்ற பிரச்னைகளுக்கு செக் வைக்கவும் இதன்மூலம் முடியும் என்று நினைக்கிறது.


தி.மு.க.,வின் இந்த முயற்சியை முறியடிக்க, பேச்சுவார்த்தையை கடைசி வரை இழுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பா.ம.க.,வை ஓரம்கட்ட முடியும், அதிக சீட்களை தி.மு.க.,விடம் பெற முடியும் என காங்கிரஸ் கருதுகிறது. இதனால், இழுபறி கடைசி நிமிடம் வரை நீடிக்கவே அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தலித் தலைவர் தேடும் காங்.,: கடந்த தேர்தலில் பா.ம.க.,வுக்கு ஒதுக்கிய 31ம், இடது சாரிகளுக்கு ஒதுக்கிய 23ஐயும் சேர்த்து மொத்தம் 54 இடங்களில்தான் இரு கட்சிகளுக்கும் பிரச்னை. இந்த தேர்தலில் புதிதாக இடம்பெறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 இடங்களை அளித்துவிட்டால், 25 இடங்கள்தான் பிரச்னை. காங்கிரஸ் தரப்பில் குழுக்கள் அமைக்கப்படவில்லை. என்றாலும் ஐந்து பேர் கொண்ட குழுவில் தற்போதைக்கு சிதம்பரம், வாசன், தங்கபாலு ஆகியோர் பெயர்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டன. மீதியுள்ள இருவரில் ஒருவர் தலித் சமூகத்தவராக இருக்க வேண்டுமென காங்கிரஸ் நினைக்கிறது. இதற்காக, தமிழக காங்கிரசில் உள்ள தலித் தலைவர்களில் யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனையில் மேலிடம் உள்ளது. தி.மு.க.,வுடன் மாநில அளவில் நடைபெறப்போகும் பேச்சுவார்த்தையில் இந்த ஐவர்குழு பேசி முடித்துவிட்டு, இறுதியாக மேலிட தலைவர்கள் பேசி இறுதி செய்யவுள்ளனர்.