Tuesday, February 1, 2011

தமிழரை (மட்டும்) சோதிக்கும் இரயில்வே!

                                    சென்னையில் இருந்து வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே கோவா செல்லும் வாஸ்கோ விரைவு தொடர் வண்டியில் கடந்த வாரம் குடும்பத்துடன் சென்றுபோது, இரயில் பயண நடத்துனர் வந்து பயணிகளின் பயணச் சீட்டை வாங்கி சரி பார்த்துவிட்டுச் சென்ற சிறிது நேரத்தில், ஒரு சோதனைக் குழு (4 பெண்கள் ஒரு ஆண்) எங்கள் பயணப் பெட்டிக்கு வந்தது




எங்கள் பெட்டியில் அடுத்தடுத்த அறைகளில் 5, 6 பேர் குழுவாக பயணம் செய்யும் இரண்டு குழுக்கள் இருந்தன. அவர்களிடம் சென்று, அவர்கள் இணையத்தின் வாயிலாக பயண சீட்டு முன் பதிவு செய்திருந்ததால், அவர்கள் ஒவ்வொருவரையும் ஏதாவது ஒரு அடையாள அட்டையை காட்டச் சொல்லிக் கேட்டது. அவர்களில் ஒருவர் தனது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை காட்டியபோது, அது போதாது, எல்லோரும் காட்ட வேண்டும் என்று அந்த சோதனைக் குழுத் தலைவி கட்டளையிட்டார். அப்படி எந்த நிபந்தனையும் பயணச் சீட்டில் இல்லையே என்று ஒரு பயணி கேட்க, அவரிடம் கோபமாக பாய்ந்த அந்தத் தலைவி, நாங்கள் சட்டப்படிதான் (எந்தச் சட்டம் என்று கேட்டதற்கு பதில் இல்லை) செய்கிறோம். இருக்கிறதா? இல்லையா? என்று அதிகார தோரணையில் மிரட்ட, வாய் தகராறு மூண்டது.
உடனே, அந்த சோதனைக் குழுத் தலைவி, ‘மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு’ என்றெல்லாம் கூறி, முறையாக வினா எழுப்பியவரை மிரட்டினார். அவர் மிரளவில்லை. அவரைத் தவிர அந்தக் குழுவில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் அடையாள அட்டைகளை காட்ட, அவரை மட்டும் விட்டுவிட்டனர். பக்கத்து அறையில் பயணம் செய்த மாணவர்கள் 6 பேரை உலுக்கியெடுக்க, அதில் ஒருவர் வேறொருவர் பயண சீட்டில் வருவதை கண்டுபிடித்து, இரண்டு மடங்கு அபராதம் விதித்து, வசூலும் செய்துவிட்டது. அதற்கு ஒரு திருப்தி. அப்போது அந்தக் குழுவில் இருந்த ஒரு பெண் சோதகரைப் பார்த்து, “இப்படிப்பட்ட சோதனை எதுவும் மற்ற மாநிலங்களில் நடைபெறுவதில்லையே, ஏன்?” என்று கேட்டேன். அதற்கு பதிலேதும் அளிக்காமல், அரக்கோணம் வந்ததும் இறங்கி சென்றது சோதனைக் குழு! எங்களுடைய பயணச் சீட்டை சோதிக்கவில்லை. சோதித்தால் என் மனைவிக்கு ஏது அடையாள அட்டை? ஆனால் அந்தக் குழு கண்டுகொள்ளவில்லை. வந்தது, வசூலித்தது, போய்விட்டது!
ஒரு குழுவாக பயணச் சீட்டு பதிவு செய்வதும், அதில் ஒருவர் இடத்தில் வேறொருவர் பயணம் செய்வதும் எந்த விதத்தில் இரயில்வேயை பாதிக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், ஒரு குழுவாக பயணச் சீட்டு பதிவு செய்யும்போது, அதிலுள்ள அனைவரும் அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்ற விதி ஏதும் இருக்கிறதா என்று பயணப் பதிவு விவரத்தைப் பார்த்தால், அதில், “This ticket will only be valid along with an ID Proof in original” என்றுதான் உள்ளது. அதாவது ஒரு (an) அடையாள அட்டை இருக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறது. ஆனால், பயணம் செய்யும் அனைவரும் அடையாள அட்டை காட்ட வேண்டும் என்று ஒரு விதியும் இல்லை. ஆனால், குழுவாக பயணம் செய்வோரை குறி வைத்து இப்படி ஒரு வசூல் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறது தென்னக இரயில்வே, அதுவும் தமிழ்நாட்டிற்குள் மட்டும்!
இங்கிருந்து கன்னியாகுமரிக்குச் சென்றபோதும், கோவையிலிருந்து வந்தபோதும் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஆனால், நாட்டின் பல இடங்களில் இருந்து (கோவாவில் இருந்து திரும்பி வரும்போது கூட) அப்படி ஒரு சோதனை ஒரு இடத்திலும் நடக்கவில்லை! கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு பல முறை பயணம் செய்துள்ளேன், ஒரு முறையும் இப்படிப்பட்ட சோதனை அங்கு ஒருபோதும் நடந்து பார்க்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் இந்த ஸ்பெஷல் சோதனை? தெரியவில்லை.