புதுடில்லி : தமிழகம் உட்பட, ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலின் போது, பண பலம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக, வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கடுமையாக கண்காணிக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழகம், மேற்குவங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு விவரம் வருமாறு:தேர்தல் நேரத்தில் வாக்காளர்களைக் கவரும் வகையில், அவர்களுக்கு பணம், மது மற்றும் இதரப் பொருட்களை வழங்குவது லஞ்சம் என, கருத்தில் கொள்ளப்படும். இந்திய தண்டனைச் சட்டத்தில், அது குற்றமாகும். எனவே, இந்த வகையில், வாக்காளர்களைக் கவர முற்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
மேலும், பணம் கொடுத்து, வேட்பாளர்கள் தங்களுக்கு சாதகமாக மீடியாக்களில் செய்தி வெளியிடச் செய்வதையும் கண்காணிக்க வேண்டும். வேட்பாளர்களின் இதுபோன்ற செலவுகளை எல்லாம், தேர்தல் செலவுகளாக கணக்கில் கொள்வதோடு, தவறு செய்தவர்களுக்கு எதிராக, போலீசில் புகார் அளிப்பது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிப்பது உட்பட, சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேட்பாளர்கள் தங்களின் அன்றாட செலவு கணக்குகளை பராமரிக்க வேண்டியது அவசியம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட, 30 நாட்களுக்குள், தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றாலும், தேர்தல் பிரசார காலங்களில், அவர்களின் செலவு கணக்குகளை அவ்வப்போது தேர்தல் செலவு பிரிவினர் பரிசீலிக்க வேண்டும்.வாக்காளர்களுக்கு பணம் அல்லது மது அல்லது இதரப் பொருட்கள் கொடுப்பதாக, எப்போது புகார் வந்தாலும், உடனே கமிஷனின் பறக்கும் படையினர் அங்கு செல்ல வேண்டும். அப்படையினர், தேவையான ஆதாரங்களை திரட்டுவதோடு, வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுத்த பொருட்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டும். இதுபற்றி தேர்தல் அதிகாரிக்கு உடனடியாக தகவல் அனுப்ப வேண்டும்.பணம் கொடுத்து வெளியிடப்படும் செய்திகள் தொடர்பாக, தேர்தல் செலவு கண்காணிப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து, வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பலாம். செய்திகள் வெளியாக செலவிட்ட தொகையை ஏன் தேர்தல் செலவு கணக்கில் கொண்டுவரவில்லை என, விசாரிக்கலாம். பணம் கொடுத்து செய்திகள் வெளியிடப்பட்டால், அதுபற்றி தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர், 24 மணி நேரத்திற்குள் தேர்தல் கமிஷனக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
திருமண மண்டபங்கள் அல்லது சமுதாயக் கூடங்கள் மற்றும் இதர பெரிய அரங்கங்கள், வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை போன்ற பரிசுப் பொருட்களும், உணவு வகைகளும் வழங்கப் பயன்படுத்தப்படுவதாக தேர்தல் நேரத்தில், அடிக்கடி புகார்கள் வருகின்றன. ஐந்து மாநில தேர்தலின்போது இதுபோன்று நடந்தால், அவற்றை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவர்வதற்காக, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற திட்டங்களுக்கு வழக்கத்திற்கு மாறாக கூடுதல் சம்பளம் கொடுக்கப்படலாம். அதாவது, சம்பளம் என்ற பெயரில் கூடுதல் பணம் கொடுக்கப்படலாம். அதையும் தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.தேர்தல் நன்னடத்தை விதிகளால், ஏழை மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. இருந்தாலும், அரசு திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட சம்பளத்திற்கு மேலாக, வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு கூடுதல் பணம் கொடுத்தால், அதை அனுமதிக்க முடியாது. இது ஊழலாகும்; தேர்தல் குற்றமாகும்.
மதுபானங்கள் கொடுத்து வாக்காளர்கள் கவரப்படலாம் என்பதால், மதுபான உற்பத்தி, அதன் விற்பனை மற்றும் ஸ்டாக் நிலவரங்களையும், தினமும் மதுபான கடைகள் திறக்கப்படும் மற்றும் மூடப்படும் நேரத்தில் உள்ள நிலவரங்களையும் தேர்தல் அதிகாரிகள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.மாநிலங்களுக்கு இடையே சென்று வரும் வாகனங்களை சோதனைச் சாவடிகளில் உள்ளவர்களும், கலால் துறையினரும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள், பெரிய ரயில் நிலையங்கள், ஓட்டல்கள், பண்ணை வீடுகள் போன்ற இடங்களிலும், ஹவாலா ஏஜன்ட்கள், நிதி புரோக்கர்கள், கேஷ் கூரியர்கள், பான் புரோக்கர்கள், இதர சந்தேகத்திற்குரிய நிறுவனங்கள் மற்றும் நபர்களிடமும் அதிகளவில் கணக்கில் வராத பணம் புழங்குவதாக தெரியவந்தால், அவற்றையும் கண்காணிக்க வேண்டும். வருமான வரிச் சட்ட விதிகளின் கீழ்தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுக்க பணம் மற்றும் இதரப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் நேரத்தில் புகார்கள் வரலாம். இந்தப் புகார்களை பதிவு செய்ய, 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஒன்றை வருமான வரித்துறை இயக்குனர் ஜெனரல் அலுவலகம் திறக்க வேண்டும்.தேர்தல் செலவு கண்காணிப்பு அமைப்புகள் மாவட்டங்கள் திறமையான வகையில் செயல்பட வேண்டும். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள டி.இ.ஓ.,க்களுக்கு தேர்தல் செலவு கண்காணிப்பு குழுவின் பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் உதவி செய்வர்.இவ்வாறு தேர்தல் கமிஷன் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.