சென்னை: "விரைவில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ள, அ.தி.மு.க., அரசு, கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்' என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை தொடர்ந்து, கருணாநிதி வஞ்சித்து வருவதை பார்க்கும் போது, "சொல்வது ஒன்று, செய்வது ஒன்று' என்ற பழமொழி நினைவிற்கு வருவதோடு, கருணாநிதியிடம் அரசியல் காழ்ப்புணர்ச்சி மேலோங்கி நிற்பதும் தெளிவாகிறது. அனுபவம் வாய்ந்த கவுரவ விரிவுரையாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, புதிதாக ஆசிரியர்களை நியமிக்கபோவதாக தி.மு.க., அரசு அறிவித்துள்ளது மிகுந்த வேதனையளிக்கும் செயல். கவுரவ விரிவுரையாளர்களில் பெரும்பாலானோர், 35 வயதை கடந்தவர்கள். இந்த வருமானத்தை நம்பி, திருமணம் செய்து குடும்பத்துடன் வசிக்கின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, இது போன்ற நடவடிக்கையை கருணாநிதி எடுத்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுரவ விரிவுரையாளர்களை அழைத்து பேசி, பணி நிரந்தரம் உள்ளிட்ட அவர்களது கோரிக்கையை நிறைவேற்றிட ஆவண செய்ய வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை தி.மு.க., அரசு புறக்கணிக்கும் பட்சத்தில், விரைவில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ள அ.தி.மு.க., அவர்களது கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றும், என்றார்.