அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம் பெறுவதிலும், ம.தி.மு.க., மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் இறுதி வடிவம் பெறுவதிலும் இழுபறி நீடிப்பதற்கு, "தேய்பிறை' ஒரு காரணமாக இருந்தாலும், தொகுதி எண்ணிக்கையை பங்கிடுவதில் கூட்டணிக் கட்சிகளுக்குள் திருப்தி ஏற்படவில்லை என்பது மற்றொரு காரணமாக உள்ளது.
அ.தி.மு.க., அணியில் புதிய தமிழகம், இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், மனித நேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய ஐந்து கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. இதில், புதிய தமிழகம் கட்சி மற்றும் நடிகர் கார்த்திக் தலைமையில் இயங்கி வரும் அகில இந்திய நாடாளும் கட்சியும் அ.தி.மு.க.,விடம் ஒன்பது தொகுதிகளை கேட்டு கோரிக்கை விடுத்துள்ளன.
கூட்டணியில் பிரதான கட்சியாக ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டு குழுவினருடன் அ.தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினர் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டனர். ஆனால், தொகுதிப் பங்கீடு உடன்பாடு எட்டவில்லை. இதற்கு காரணம், ம.தி.மு.க., தரப்பில் கடந்த சட்டசபை தேர்தலில் ஒதுக்கியது போல் 35 தொகுதிகளை அக்கட்சி பிடிவாதமாக கேட்டுள்ளது. ஆனால், அ.தி.மு.க., தரப்பில் 18 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளது. அதேபோல், மார்க்சிஸ்ட் கட்சி 15 தொகுதிகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 13 தொகுதிகளையும் கேட்டுள்ளன. அ.தி.மு.க., தரப்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகளையும் ஒதுக்க முன்வந்துள்ளது.
தே.மு.தி.க.,வை பொறுத்தவரையில் 41 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்க அ.தி.மு.க., முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கிறது? தி.மு.க.,விடம் எத்தனை தொகுதிகளை அக்கட்சி பெறவுள்ளது என்ற விவரத்தை தெரிந்து கொண்ட பின், தே.மு.தி.க., தனது இறுதி முடிவை அறிவிக்கவுள்ளது.தி.மு.க., அணியில் இடம் பெற்ற பா.ம.க.,வுக்கு வெறும் 4 சதவீதம் ஓட்டுக்கள் தான் உள்ளன. ஆனால், திருத்தணி முதல் கன்னியாகுமரி வரை 10 சதவீதம் ஓட்டுக்கள் வைத்திருக்கும் தே.மு.தி.க.,விற்கு 60 தொகுதிகளை அ.தி.மு.க., தர வேண்டும் என, தே.மு.தி.க., விரும்புகிறது. மேலும், காங்கிரஸ் கட்சிக்கு இணையாக தனது கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதிலும் தே.மு.தி.க., உறுதியாக உள்ளது.
தி.மு.க., அணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து, காங்கிரஸ் வெளியேறுமானால் அக்கட்சியுடன் மூன்றாவது அணி அமைத்து போட்டியிடவும் தே.மு.தி.க., தயாராகவுள்ளது.தேர்தல் முடிவுக்கு பின், எந்த அணியை ஆதரிப்பது என்பதை முடிவு செய்யலாம் என்ற கணக்கையும் தே.மு.தி.க., கணித்துள்ளது. இரண்டு திராவிட கட்சிகளையும் புறக்கணித்து விட்டு, தனித்து நிற்கும் போது தான் 10 சதவீத ஓட்டுக்கள் தே.மு.தி.க.,விற்கு கிடைத்தது.
இதற்கிடையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி, அவருக்கு வாழ்த்து சொல்ல போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு இன்று மாலை 3 மணிக்கு விஜயகாந்த் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் அ.தி.மு.க., வட்டாரத்தில் எழுந்துள்ளது.
கடவுள் நம்பிக்கை, ஜோதிடம் மீது அதீத நம்பிக்கையை வைத்திருக்கும் விஜயகாந்த், தற்போது நடந்து வரும் தேய்பிறையில் தொகுதி பங்கீடு எண்ணிக்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டார் என அவரது கட்சியினரும் நம்புகின்றனர். இந்நிலையில், அ.தி.மு.க., கூட்டணியில் தனது கட்சிக்கு ஒதுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, எந்தெந்த தொகுதிகள் என்பதை அடையாளப்படுத்தி தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் தே.மு.தி.க., விதிப்பதால் தான் கூட்டணி இறுதி வடிவம் பெறுவதில் இழுபறி நீடிக்கிறது.தேய்பிறை முடிந்ததும், கூட்டணிக் கட்சிகள் விரும்பிய தொகுதிகளின் எண்ணிக்கையை நியாயமாக ஒதுக்கீடு செய்வதற்கு அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க., அணியில் ஒதுக்கீடு பெற்ற கட்சிகள் விவரம்
1.புதிய தமிழகம் 2
2.இந்திய குடியரசுக் கட்சி 1
3.அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் 1
4.மனித நேய மக்கள் கட்சி 3
5.அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி 1
நன்றி
தினமலர்