சென்னை : "சி.பி.ஐ., அதிகாரிகள் தங்களுடைய கடமையை பாரபட்சமின்றி, அச்சமின்றி செய்தால், ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் மிகப் பெரிய தொகையை சட்ட விரோதமாக பெற்ற அனைவரும், சிறைக்கு பின்னால் கம்பி எண்ண வேண்டி வரும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதியும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட வேண்டும் என, சுப்ரமணியசாமி கோர்ட்டில் விடுத்த அறிக்கையை, நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன். இந்தக் கோரிக்கைக்கான காரணங்களும், ஆதாரங்களும் பின் வருமாறு:கனிமொழி இன்று பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதி. தமிழ்ப் பண்பாட்டை ஊக்குவிக்கும் கலாசார விழாக்களை ஆண்டுதோறும் சென்னையில் நடத்தும் பொறுப்பை, கனிமொழி மற்றும் ஜெகத் கஸ்பரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தமிழ் மையத்திடம் மாநில அரசு ஒப்படைத்தது. இந்த நிறுவனம், சென்னை சங்கமம் என்ற பெயரில் கலாசார விழாக்களை நடத்தி வருகிறது.
ராஜாத்திக்கு சொந்தமான ராயல் எண்டர்பிரைசஸ் என்ற அறைகலன் காட்சியகத்தில் பெருக்குபவராக பணிபுரிந்து வந்த சரவணன், பின் அதே நிறுவனத்தின் மேலாளர் ஆனார். சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச்சைக்குரிய 350 கோடி ரூபாய் மதிப்புடைய வோல்டாஸ் நிலம், மலேசியாவைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவருக்கு வெறும் 25 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட போது தரகராகச் செயல்பட்டவர் தான் இந்த சரவணன்.இது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என வெளிப்படையாகத் தெரிவித்த ராஜாத்தி, இந்த நிலம் குறித்த தனது கவலையை நிரா ராடியாவுடன் டெலிபோன் உரையாடலில் தெரிவித்திருக்கிறார். சொற்ப விலைக்கு வோல்டாஸ் நிலத்தை வாங்கிய மலேசியாவைச் சேர்ந்த சண்முகநாதன் தான், கோத்தகிரியில் உள்ள 500 ஏக்கர் பரப்பளவிலான தேயிலைத் தோட்டத்தை, வெறும் இரண்டரை கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்.
சி.ஐ.டி., காலனியில் அமைந்துள்ள ராஜாத்திக்கு சொந்தமான புதிய வீட்டின் "ஏசி' பெட்டிகளை பழுது பார்த்துக் கொண்டிருந்த "ஏசி' மெக்கானிக் டேனியல் சாமுவேல், தமிழகத்தின் இரண்டாவது பெண்ணுக்காக மூணாறு, கோட்டயம் மற்றும் கேரளாவில் உள்ள இதர இடங்களில் சொத்துகளை வாங்கி குவித்துக் கொண்டு இருக்கிறார்.பாலங்கள், புதிய நூலகக் கட்டடம், தலைமைச் செயலகக் கட்டடம் ஆகியவற்றை கட்டுவதற்கான பொறுப்பு, இந்த இ.டி.ஏ., குழுமத்திடம் தான் ஒப்படைக்கப்பட்டது.
முதலில் 450 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தலைமைச் செயலகமாகக் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.பென்னாகரம் இடைத்தேர்தலின் போது 750 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடம் என, தலைமைச் செயலகக் கட்டடத்தைப் பற்றி கருணாநிதி குறிப்பிட்டார். கவர்னர் உரையில் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்திற்கான செலவு 910 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில், புதிய தலைமைச் செயலகக் கட்டடத்திற்கான செலவு 1,100 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.ஸ்பெக்ட்ரம் இழப்பைப் போலவே, இந்தக் கட்டடத்தை கட்டி முடிப்பதற்குள், இதற்கான செலவு மேலும் உயரும். மேற்படி திட்டங்களின் மூலம் பயனடைந்த இதே இ.டி.ஏ., குழுமம் தான், கருணாநிதி குடும்பத்தின் நிதியை வெளிநாடுகளில் கொண்டு சேர்ப்பதில் கால்வாயாகத் திகழ்கிறது.சி.பி.ஐ., அதிகாரிகள் தங்களுடைய கடமையை பாரபட்சமின்றி, அச்சமின்றி செய்தால், ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் மிகப் பெரிய தொகையை சட்ட விரோதமாக பெற்ற அனைவரும் சிறைக்கு பின்னால் கம்பி எண்ண வேண்டி வரும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். பிடித்தால் கீழே ஓட்டு போடவும்