Tuesday, February 8, 2011

அ.தி.மு.க வெற்றி பெற தே.மு.தி.க அவசியம் வேண்டும்




அ.தி.மு.க வெற்றி பெற தே.மு.தி.க அவசியம் வேண்டும்இதனால் ஆட்சியில் பங்கும், துணை முதல்வர் பதவியையும் விஜய்காந்த் கோருவாரேயானால் அதில் நிறைய நியாயம் இருக்கிறது.

அவருடைய கோரிக்கையை நாம் அரசியல்ரீதியாகத்தான் பார்க்கிறோம். ஈழப்பிரச்சினை உட்பட எத்தனையோ பிரச்சனைகளில் ஜெயலலிதாவும் சோ அவர்களும் ஒருமித்தக் கருத்து கொண்டவர்கள். அ.தி.மு.கவைத் தோற்றுவித்த அமரர் எம்.ஜி.ஆரின் கொள்கை, கோட்பாடுகளுக்கு நேர் எதிராகத்தான் இன்றைக்கு அந்தக் கழகம் செயல்படுகிறது. தேர்தல் காலங்களில் மட்டும் அந்தக் கழகத் தலைமைக்கு எம்.ஜி.ஆரின் நினைப்பு வரும்.

சட்டமன்றத் தேர்தலில் இரண்டு அணிகள் அமையப் போகின்றன. ஒன்று தி.மு.க. அணி. இன்னொன்று அ.தி.மு.க. அணி. காங்கிரஸ் கட்சியை தமது அணிக்குக் கொண்டுவர அ.தி.மு.க. தலைமை கடும் முயற்சி செய்தது. ஏற்கனவே அந்தக் கழகத்திடம் நிரம்பப் பாடம் கற்றுக்கொண்ட காங்கிரஸ், அதற்கு உடன்படவில்லை.

எனவே இப்போது மீண்டும் வாயிலுக்கு வெளியே காத்திருக்கும் கட்சிகளை அழைத்து அணி காண அ.தி.மு.கழகம் முயற்சிக்கிறது. ஆனால் இன்றுவரை கழகத்துக் கதவை கேப்டனின் தே.மு.தி.க. தட்டிக் கொண்டிருக்கவில்லை. காரணம் அதன் வலிமை. கவுரவமான உடன்பாட்டை அந்தக் கட்சி எதிர்பார்க்கலாம். அப்படி எதிர் பார்ப்பது நியாயமும்கூட.
ஏனெனில் அ.தி.மு.க. அணியில் இடம் பெற வரிசையில் நிற்கும் எந்தக் கட்சிக்கும் 5 சதவிகித வாக்குகள் கூட இல்லை. அந்தக் கட்சிகளுக்கு அடையாளங்கள் உண்டு. அவ்வளவுதான். சுருங்கச் சொன்னால் பெருங்காயம் இருந்த பாத்திரங்கள்.
கேப்டனின் தே.மு.தி.கவுக்கு மட்டும் தான் தமிழகம் தழுவிய அளவில் எல்லா தொகுதிகளிலும் பத்து சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் உண்டு. எனவே அதற்குரிய மரியாதையை கேப்டன் எதிர்பார்ப்பதில் தவறில்லை. அந்த மரியாதை எப்படி இருக்க வேண்டும் என்பதனையும் அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறார்.
"தன்மானத்தை இழந்து கூட்டணி கொள்ளமாட்டோம். ஒரு தேர்தல் வெற்றிக்காகத் தொண்டர்களை அடகு வைக்கமாட்டேன்' என்று அவர் முரசறைந்து வருகிறார். எனவே அ.தி.மு.க. அணிக்கு தே.மு.தி.க. வரவேண்டும் என்று விரும்புகிறவர்கள் என்ன செய்ய வேண்டும்?. குறைந்தபட்சம் தேர்தலுக்கு முன்னரும் தேர்தலுக்குப் பின்னரும் கேப்டனின் மரியாதைக்குப் பங்கம் வந்து விடாது பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை அ.தி.மு.க. தலைமையிடம் அவர்கள் பெற வேண்டும். ஏனெனில் சுயமரியாதையை இழந்து கூட்டணி கொள்ள மாட்டோம் என்பதனை கேப்டன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அ.தி.மு.கவோடு உடன்பாடு கண்ட சோனியா காந்தி எத்தகைய கொடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார் என்பதனை எவரும் மறந்திருக்கமாட்டார்கள்.

ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தலின்போது மதுரையில் செல்வி ஜெயலலிதா பேசுகிறார். ம.தி.மு.க. தலைவர் மேடையில் அல்ல, மேடைக்கு எதிரே ஆடியன்ஸோடு ஆடியன்ஸாக, மக்களோடு மக்களாக உட்கார வைக்கப் பட்டார். அந்தக் கதி கேப்டன் அவர்களுக்கு ஏற்படாது என்று சோ போன்றவர்கள் அ.தி.மு.க. தலைமையைக் கேட்டுச் சொல்ல வேண்டும். தெரியாத்தனமாக அ.தி.மு.க. அணிக்குப் போய் குறுகிய காலத்தில் நிறைய பாடங்கள் படித்து தப்பித்து வந்தது விடுதலைச் சிறுத்தைகள் தான். அதனால்தான் இந்த ஆண்டு எங்கள் ஆண்டு என்று அவர்கள் தலை நிமிர்ந்து சொல்கிறார்கள்.

செல்வி ஜெயலலிதாவும் கேப்டன் சாரும் கூட்டாகத் தமிழகம் முழுமையும் ஒரே மேடையில் நின்று பிரச்சாரம் செய்தால் ஓரளவு பலனை எதிர்பார்க்கலாம்.

தி.மு.க. கூட்டணிக்குக் கண்களுக்குத் தெரியாத மிகப்பெரும் வலிமை இருக்கிறது. அந்த வலிமைதான் மக்கள் செல்வாக்கு. கடந்த ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி அரசு செய்த மக்கள் நலப்பணிகள் அரசியல், கட்சி எல்லைகளை உடைத்துக் கொண்டு அந்த மகத்தான செல்வாக்கை தி.மு.கவுக்கு தேடித் தந்திருக்கிறது.

தமிழக அரசு செயல்படுத்தியதில் 10 சதவீதப் பணிகளைத்தான் பீகாரில் நிதிஷ்குமார் அரசு செயல்படுத்தியது. அவருடைய கூட்டணியே மகத்தான வெற்றி பெற்றபோது தமிழகத்தில் தி.மு.க. அணி எத்தகைய வெற்றி பெறும் என்று சொல்லத் தேவையில்லை.

தி.மு.க. ஆட்சி அமைத்தால் அதில் தாங்கள் அங்கம் பெறவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்துகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு ஈடாக வலிமை கொண்ட தே.மு.தி.க. அதேபோல் ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று கோருமானால் அதில் நிரம்ப நியாயம் இருக்கிறது.

வெறும் 50 சீட்டுகளுக்காக அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க. இடம்பெறுமானால் அந்தக் கட்சி தனது எதிர்காலத்தை ம.தி.மு.கவைப் போல் இழந்துவிடும். சுயமரியாதையையோ, தன்மானத்தையோ விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று இதுவரை கேப்டன் சார் சொல்லி வந்தது தேர்தல்கால வெற்று முழக்கம் என்று ஆகிவிடும்.

குறுகிய காலத்தில் தே.மு.தி.க. அபரிமிதமான மக்கள் செல்வாக்கைப் பெற்ற அரசியல் இயக்கம். இன்னும் அதற்கு எதிர்காலம் உண்டு. எனவே எடுத்து வைக்கின்ற அடி அழுத்தமாக இருக்கவேண்டும். எச்சரிக்கையாக இருக்க வே
ண்டும்.



பிடித்தால் கீழே ஓட்டு போடவும்