Sunday, February 20, 2011

காங்கிரசுக்கு "கடுக்காய்' கொடுத்த தி.மு.க.,: பா.ம.க., தொகுதி உடன்பாட்டின் பின்னணி


அவசர அவசரமாக பா.ம.க.,விற்கு 31 தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கியதால், காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளது. தி.மு.க.,வுக்கும் காங்கிரசுக்கும் இடையில் ஒரு குழு போடப்பட்டு, இரு தரப்பும் பேசி ஒரு முடிவுக்கு வராத நிலையில், தி.மு.க., எடுத்துள்ள இந்த திடீர் முடிவு எதற்காக என்ற சந்தேகம், காங்கிரசுக்கு எழுந்துள்ளது.


டில்லி வந்திருந்த போது முதல்வர் கருணாநிதி, தன் பேட்டியில், "பா.ம.க.,வும் கூட்டணியில் இருக்கிறது' என்று கூறி வைக்க, அன்றைய தினம் இரவே, பா.ம.க., மறுத்து அறிக்கை விட்டது. அடுத்தநாள் காலை, முதல்வர், "அவர்களும் முடிவு செய்யவில்லை; நாங்களும் முடிவு செய்யவில்லை' என்று கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின், சென்னைக்கு திரும்பிய முதல்வர், தி.மு.க., பொதுக்குழுவில் பேசும்போது, "சோனியாவை டில்லியில் சந்தித்தபோது, "பா.ம.க.,வை ஏன் கூட்டணியில் சேர்க்கிறீர்கள்; கடந்த தேர்தலில் நம் கூட்டணியை விட்டு வெளியேறிச் சென்றவர்கள்; கடைசிவரை ஆட்சி அதிகாரத்தை சுவைத்துவிட்டு, கடைசியில் துரோகம் செய்து விட்டு சென்ற கட்சி அது' என்று என்னிடம் வருத்தப்பட்டார்' எனக் கூறியதாக, செய்திகள் வெளியாயின.


இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து, காங்கிரசும், தி.மு.க.,வும் பேசுவதற்கு, இரு தரப்பிலும் ஐவர் குழுக்கள் அமைக்கப்பட்டன. காங்கிரசின் ஐவர் குழு, ஒரே ஒருமுறை முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததோடு சரி; டில்லிக்கு வந்து தமிழக மேலிடப் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத்தை சந்தித்து, ஆலோசனை நடத்தினர். காங்கிரசுக்கு எத்தனை தொகுதி என்பது குறித்து, ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் கூட துவங்கவில்லை. இந்த சூழ்நிலையில், பா.ம.க.,வுக்கு திடீரென 31 தொகுதிகளை ஒதுக்கியுள்ள விஷயம், காங்கிரசை பலத்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.


இதுகுறித்து நேற்று, டில்லியில் தகவலறிந்த உயர் வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பெறாத தி.மு.க.,வுக்கு, ஐந்து ஆண்டுகளும் நிபந்தனையற்ற ஆதரவை, காங்கிரஸ் அளித்து வந்தது. இதனால், இம்முறை காங்கிரசுக்கு அதிக இடங்கள் கேட்டுப் பெற வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆட்சியிலும் பங்கு என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்தது. சில வாரங்களுக்கு முன் தேர்தல் குறித்த பேச்சு தீவிரம் அடையத் துவங்கிய சமயத்தில், காங்கிரசுக்குத் தான் இம்முறை முதல்மரியாதை என, தி.மு.க., தரப்பே வாக்குறுதி அளித்தது. காங்கிரஸ் திருப்திபடும் அளவுக்கு தொகுதிகளைத் தந்துவிட்டு, அடுத்ததாக பிற கட்சிகளுக்கு ஒதுக்க தி.மு.க., தீர்மானித்திருப்பதாக கூறப்பட்டது. ஆனாலும், காங்கிரஸ் கேட்கும் 80, 90 தொகுதிகள் என்பது, தி.மு.க.,வுக்கு சற்று நெருக்கடியாகவே இருந்தது. இதனால், பா.ம.க.,வும் கூட்டணிக்குள் இருப்பதாக முன்கூட்டியே கூறிவிட்டால், காங்கிரசின் பேரத்தை குறைக்கலாம் என தி.மு.க., நினைத்தது.


முதல்வரின் டில்லி பேட்டிக்குப் பிறகு அதுமுடியாமல் போனது. பா.ம.க., பற்றிய விவகாரம் குறித்து இரு கட்சிகளுக்கு இடையில் வந்தபோது கூட, காங்கிரஸ் தரப்பிலிருந்து தி.மு.க.,விடம், "பா.ம.க., பற்றி பேச்சுவார்த்தை நடத்துங்கள்; அதில் தவறில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் எத்தனை என்பதை முடிவு செய்து விட்டு, பிற கட்சிகளுக்கு அளியுங்கள்' என்றே கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. காரணம் இரண்டு கட்சிகளும் கமிட்டி போட்டு பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே, இதற்கு ஒரு முடிவை சீக்கிரம் தெரிவித்தால் தான், சோனியா முன் வைக்கப்பட்டு இறுதி ஒப்புதலையும் பெற முடியும் என்று தான், தி.மு.க.,வுக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், அவசர அவசரமாக பா.ம.க.,வுக்கு 31 தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கியுள்ளது. இது காங்கிரசை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஐவர் குழுவில் இடம்பெற்றுள்ள சிதம்பரம்,வாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுமே கூட இதை எதிர்பார்க்கவில்லை. பா.ம.க.,வுக்கு ஒதுக்கியது போக, மீதமுள்ள தொகுதிகளை வைத்துத் தான் இனி தங்களிடம் தி.மு.க., பேசப்போகிறது என்பதால் அதிக பேரம் பேச முடியுமா என்ற சந்தேகம் காங்கிரசுக்கு வந்துள்ளது.


இது ஒருபுறமிருக்க, சில தினங்களுக்கு முன், குலாம்நபி ஆசாத்தை ஐவர் குழு சந்திக்க காத்திருந்த சமயத்தில், அன்புமணி டில்லிக்கு அழைக்கப்பட்டார். சோனியா, ராகுல் ஆகியோரது அப்பாயின்ட்மென்ட் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. தங்களது கவனத்திற்கு அப்பால் காங்கிரசும், பா.ம.க.,வும் பேசுவதை தி.மு.க., ரசிக்கவில்லை. காரணம் தி.மு.க.,வை விட்டுவிட்டு வேறு கூட்டணி அமைக்க காங்கிரஸ் ரகசிய முயற்சிகள் எடுக்கப்படுவதாக, அரசல் புரசலாக செய்திகள் வெளிவருகின்றன. காங்கிரசின் அந்த முயற்சியில் பா.ம.க.,வும் முக்கிய கட்சி. எனவே காங்கிரஸ் பா.ம.க., உறவு தங்களை தாண்டிப் போகிறதோ என்ற சந்தேகத்தையும் தி.மு.க., தவிர்க்கவில்லை. இதையெல்லாம் தவிர்க்க ஒரே வழி, பா.ம.க.,வுக்கு உடனே தொகுதிகளை இறுதி செய்வது தான். இந்த பின்னணியிலேயே 31 தொகுதிகளை ஒதுக்கியதன் மூலம் காங்கிரசின் பேரத்தை தவிர்த்ததோடு, தங்களைத் தாண்டி காங்கிரஸ் எந்த ஒரு முயற்சியிலும் இறங்காமல் தி.மு.க., பார்த்துக் கொண்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.